சஷி வீரவன்சவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

by Staff Writer 27-05-2022 | 3:13 PM
Colombo (News 1st) போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முறையற்ற வகையில் வௌிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பான வழக்கில் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சஷி வீரவன்சவிற்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். சஷி வீரவன்சவிற்கு சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 06 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார். பிரதிவாதி முறையற்ற வகையில் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும், முறையற்ற வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டை பிரதிவாதி வைத்திருந்தமை சாட்சிகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார். அதற்கமைய, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி முறைப்பாட்டாளரால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் அறிவித்துள்ளார். இந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, தீர்ப்பின் பிரதியொன்றை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரொருவரின் மனைவி என்ற ரீதியில் அதிகாரத்தை பயன்படுத்தி கடவுச்சீட்டை பிரதிவாதி பெற்றுக்கொண்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையூடாக குறித்த கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன், அதனை பெற்றுக்கொள்வதற்கான கருமபீடத்திற்கு செல்லாது, முறையற்ற வழிமுறையினூடாக பெற்றுக்கொண்டுள்ளதாவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். அதிகார பலத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த விடயத்திற்கு, சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமையும் வகையிலான தண்டனையை வழங்குமாறு சிரேஷ்ட பிரதி சொலிட்டர் ஜெனரல் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது சேவை பெறுநர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், பிரதிவாதியின் கடவுச்சீட்டு சட்டவிரோதமற்றது என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரதிவாதி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ மன்றுக்கு தெரிவித்தார். திருமணமாகாத இரண்டு பிள்ளைகளின் தாயாகிய அவருக்கு இலகுவான தண்டனையை வழங்கி உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். போலி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளமையானது குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை, சஷி வீரவன்சவிற்கு இன்று விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்காக அதனை நீதவான் நீதிமன்றத்தில் சஷி வீரவன்சவின் சட்டத்தரணி கையளித்துள்ளார். தமக்கெதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யுமாறு பிரதிவாதி மேன்முறையீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளதால், அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை, எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.