சூடு பிடிக்கும் கச்சத்தீவு விவகாரம் 

கச்சத்தீவை மீளப்பெற வலியுறுத்தும் தமிழக முதல்வர்; சூடு பிடிக்கும் விவகாரம் 

by Staff Writer 27-05-2022 | 8:40 PM
Colombo (News 1st) தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26) தெரிவித்தமை அரசியல் அரங்கின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மை குறிக்கோளாக உள்ளதாக தமிழக அரசின் மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலம் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமையைத் திரும்ப பெற முடியும் என்று தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்துவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் பாரத பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது 14 அம்ச கோரிக்கைகளில் கச்சத்தீவு மீட்பு தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தார். இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலையின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது, கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவுடன் தொலைபேசியில் கச்சத்தீவு மீட்பு தொடர்பில் உரையாடியதாக தமிழக ஊடகமொன்று செய்தி வௌியிட்டிருந்தது. இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுதும் உள்ள தமிழர்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற வேண்டுமானால், கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற வேண்டும் என இதன்போது அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, இந்திய மத்திய அரசின் 31,400 கோடி இந்திய ரூபா செலவிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, இந்திய மத்திய அரசு கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் பாரத பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வரின் வேண்டுகோள் தொடர்பில் பாரத பிரதமர் குறித்த நிகழ்வில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், குறித்த நிகழ்வின் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை குறித்த வேண்டுகோள் குறித்து கருத்து வௌியிட்டார். கச்சத்தீவை எப்படி திரும்பப் பெறுவது என்பது தமக்கு தெரியும் எனவும் அதனை கொடுத்தவர்களே தமக்கு பாடம் எடுக்க வேண்டாம் எனவும் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில், கச்சத்தீவை மீள பெறும் திட்டம் தொடர்பில் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் அதிருப்தி வௌியிட்டது.
பசித்தவனுக்க சாப்பாடு கொடுத்துவிட்டு கிட்னியை எடுத்த மாதிரி தான் இந்த நடவடிக்கை. ஒரு வாரத்திற்கு சாப்பாடு கொடுப்பதால் வட பகுதி மக்களோ இலங்கையில் உள்ள மக்களோ வாழ முடியுமா? நன்மை செய்யாவிடினும் துரோகம் செய்யாதீர்கள். இந்தியா தொப்புள் கொடி உறவு என்று நாங்கள் சொல்லும் போது, இன்று இந்தியா கிட்னியை பறிக்கும் வேலையை செய்கிறது
என கடற்றொழிலாளர் இணையத்தின் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக்கொள்ளவும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்தில் இந்தியர்கள் பங்கேற்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான உரிமை தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தமிழகத்தின் இராமநாதபுரத்தில் இருந்து 12.4 கடல் மைல் தொலைவிலும் நெடுந்தீவில் இருந்து 10.5 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவின் அமைவிடமுள்ளது. கச்சத்தீவில் இருந்து மேற்குத் திசையில் ஒரு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பு அமைந்துள்ள நிலையில், குறித்த பகுதியூடாக Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், நாட்டின் கடல் வளத்தினை கபளீகரம் செய்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்