அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

by Staff Writer 26-05-2022 | 6:51 PM
Colombo (News 1st) அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அத்தனகல்ல பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஜூன் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிணை கொடுத்தவரின் வீட்டிற்குச்சென்ற பிரதேச சபை உறுப்பினர், அந்நபரை மிரட்டியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அந்நபர் முறைப்பாடு செய்ய சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சாமிந்த ஹெட்டிஆரச்சியும் அங்கு சென்றுள்ளார். இதன்போது, இரு தரப்பினரிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினரை கைது செய்த பொலிஸார், அத்தனகல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது, பிரதேச சபை உறுப்பினரை ஜூன் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகளின் இவ்வாறான செயற்பாடுகள், சட்டவாட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்றது என அத்தனகல்ல நீதவான் ஷஷிகா தசநாயக்க தெரிவித்துள்ளார்.