சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் 

சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் 

எழுத்தாளர் Staff Writer

25 May, 2022 | 7:15 pm

Colombo (News 1st) மே மாதம் 9 ஆம் திகதி அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம அமைதிப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரை இன்று முற்பகல் நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்ற போது, அங்கிருந்த இரு தரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்ற போது, போராட்டக்களத்திலிருந்து வருகை தந்த சிலர் நீதிமன்றத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

வெளியிலிருந்து வருகை தந்த மேலும் சிலர் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நீதிமன்ற அதிகாரியொருவர் வருகை தந்து சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவதற்காகவே நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கூறினார்.

எவ்வாறாயினும், அங்கிருந்த அனைவரும் அடையாள அணிவகுப்பிற்கு அழைத்துவரப்படவில்லை என்பதை அறிந்துகொண்டதன் பின்னர் மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது, பொலிஸாரின் தலையீட்டுடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது அடையாளம் காண முடியாமற்போன ஒரு பெண் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்குமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம் வழங்குமாறு கடந்த 23 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்ததாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன கூறினார்.

அலரி மாளிகையில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளமை தொடர்பாக கடந்த 8 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேரணி காலி முகத்திடலை கடக்கும்போது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் எனவும் அதனை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் எழுத்து மூலம் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு ஆலோசனை வழங்கியிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உரையாடிய விதம் தொடர்பாக ஆதாரங்கள் உள்ள நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படாமை தொடர்பாக போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அதிருப்தி வௌியிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்