ராஜபக்ஸ குடும்பத்தாரை நாட்டிலிருந்து வௌியேற்ற மொஹமட் நஷீட் முயல்வதாக சர்வதேச அரங்கில் சந்தேகம்

by Bella Dalima 24-05-2022 | 8:44 PM
Colombo (News 1st) மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் இலங்கைக்கான வௌிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. மொஹமட் நஷீட் இலங்கையில் தங்கியிருந்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான பொறிமுறையை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதென The Maldives Journal இணையத்தளம் இன்று செய்தி வௌியிட்டுள்ளது. சர்வதேச உதவிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு தன்னார்வமாக முன்வந்து கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், அத்தகைய பணிகளில் எவ்வித அனுபவமும் இல்லாதவர் என இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த 19 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார். பிரதமரின் அனுமதியுடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த மொஹமட் நஷீட், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவையும் அவர் கடந்த 21 ஆம் திகதி சந்தித்தார். சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக எவ்வித அனுபவமும் இல்லாத மொஹமட் நஷீட், கடந்த சில தினங்களாக உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, ராஜபக்ஸ குடும்பத்தினர் மாலைத்தீவுகளுக்கு செல்வதற்கான பாதுகாப்பு வழிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக The Maldives Journal இணையத்தளம் தெரிவித்துள்ளது. பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஸ, மொஹமட் நஷீட்டை தொடர்புகொண்டு இலங்கையின் நிலைமை தணியும் வரை தமது குடும்பத்தவர்கள் மாலைத்தீவுகளில் தங்கியிருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக மாலைத்தீவுகள் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மொஹமட் நஷீட், ராஜபக்ஸ குடும்பத்தினருக்காக மாலைத்தீவுகளில் உள்ள இந்திய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 12 மில்லியன் டொலர் பெறுமதியான மாளிகையொன்றையும் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு சிறிய மாளிகையையும் விற்பனை செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் The Maldives Journal செய்தி வௌியிட்டுள்ளது. இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக மலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டிடம் வினவியபோது,
இலங்கை அரசியல் தலைவர்களின் வௌியேற்ற உபாயத்தின் ஒரு பாத்திரத்தை வகிப்பதாக வௌியிடப்பட்டுள்ள பக்கசார்பான செய்திகளை முற்றாக நிராகரிக்கின்றேன். இந்த கடினமான காலகட்டத்தில் எப்போதும் நண்பர்களாக செயற்படுகின்ற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன் மாத்திரம் எனது பொறுப்பு வரையறுக்கப்படுகிறது
என பதில் அளித்தார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது தந்தைக்கு நாட்டில் இருந்து வௌியேறவோ மாலைத்தீவுகளில் மாளிகை கொள்வனவு செய்யவோ எவ்வித நோக்கமும் இல்லை என நாமல் ராஜபக்ஸவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்