எரிபொருள் விலை வெகுவாக அதிகரிப்பு; சூத்திரத்திற்கு ஏற்ப விலை திருத்தம்

by Staff Writer 24-05-2022 | 7:23 PM
Colombo (News 1st) இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, இன்று (24) அதிகாலை ஒரே தடவையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இனிவரும் காலத்திலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தினால் பல்வேறு துறையினர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று (23) இரவு முதல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு அதிகரிக்கப்பட்ட புதிய விலையிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் IOC நிறுவனமும் ஒரே தடவையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தன. அதற்கமைய, 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 450 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 400 ரூபாவாகும். சுப்பர் டீசலின் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 445 ரூபாவாகும். எரிபொருள் தொடர்பிலான விலைச்சூத்திரம் ஒன்று நேற்று புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது. விலைச்சூத்திரத்தில் எரிபொருளை தரையிறக்கும் செலவு, வரி, தயார்ப்படுத்தும் செலவு, நிர்வாக செலவு, இலாபம், விலை நிலைப்படுத்தல் நிதியத்திற்கான பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்குவதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். அதன்படி, இலாபம் மற்றும் விலை நிலைப்படுத்தல் நிதியத்திற்கான பங்களிப்பு ஆகிய இரண்டு விடயங்களையும் புறக்கணித்துவிட்டு, செலவுகளை மாத்திரம் ஈடுசெய்யும் வகையில் விலைத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். தரையிறக்கும் போது ஏற்படும் செலவு மற்றும் ஏனைய செலவுகளையும் சேர்த்து விநியோகிக்கும் போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மக்களுக்கு நட்டத்திலேயே எரிபொருளை வழங்கி வந்தது. அதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலை தரையிறக்கும் போது 339.54 சதம் செலவாகின்ற போதிலும் கடன் கடித கட்டணம், கட்டணப் பட்டியலை ஏற்றுக்கொள்ளும் செலவு, துறைமுக செலவு, விநியோகத்தர்களுக்கு வழங்கும் ஆவியாதல் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், விற்பனை விநியோகக் கட்டணம், செயன்முறை செலவுகள், நிதிச் செலவுகள் மற்றும் வரியினை சேர்க்கும் போது 421 ரூபா 71 சதம் செலவாகின்றது. எனினும், 338 ரூபாவிற்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்யும்போது 83 ரூபா 71 சதம் நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அனைத்து செலவுகளையும் சேர்க்கும்போது, டீசலுக்கு 400 ரூபா 60 சதம் செலவாகின்ற போதும், தற்போது லிட்டருக்கு 60 சதம் நட்டம் அடையும் வகையிலேயே விலைத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். சுப்பர் டீசலுக்கு 444 ரூபா 95 சதம் செலவாகின்ற நிலையில், அதன் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், மண்ணெண்ணெய் தொடர்ந்தும் 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது. மண்ணெண்ணெய்க்கு 362 ரூபா 26 சதம் செலவாகின்ற நிலையில், 275 ரூபா 26 சதம் நட்டத்தை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார். விலை அதிகரிப்பையடுத்து, எரிபொருள் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, மோட்டார் சைக்கிளுக்கு ஆகக் கூடுதலாக 2500 ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு ஆகக் கூடுதலாக 10,000 ரூபாவிற்கும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் பல்வேறு துறைகளையும் பாதித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதற்கமைய ஆகக்குறைந்த கட்டணம் 32 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இதுவரை அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்படவில்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. எனினும், டீசல் விலை அதிகரிப்பிற்கு அமைய, வருடாந்தம் 15 பில்லியன் மேலதிக செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியது. ரயில்வே திணைக்களத்தின் வருடாந்த வருமானம் 6 பில்லியனாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் 10 பில்லியன் நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இதனிடையே, முதலாவது கிலோமீட்டருக்காக 10 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முச்சக்கர வண்டி சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் தெரிவித்தது. இதேவேளை, நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக டீசல் பயன்படுத்தப்படுவதுடன், எரிபொருள் விலையேற்றத்திற்கு எற்ப ஒரு மின் அலகிற்கான செலவும் அதிகரித்துள்ளது. மின் உற்பத்திக்கு சுமார் 4500 மெட்ரிக் தொன் டீசல் தேவைப்படுவதுடன், நீர்மின் உற்பத்தி மற்றும் நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளமையினால், தற்போது அதன் தேவை 2000 மெட்ரிக் தொன்னாக குறைவடைந்துள்ளது. ஒரு அலகு மின் உற்பத்திக்கு இலங்கை மின்சார சபை 44 ரூபாவை செலவு செய்கிறது. எனினும், தற்போது அது 17 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அலகிற்கு 27 ரூபா நட்டத்தை மின்சார சபை எதிர்நோக்குகிறது. எனவே, மின் கட்டணம் 125 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், 1000 ரூபா கட்டணம் செலுத்தும் ஒருவர் 2500 ரூபாவை செலுத்த வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சேவை சங்கம் குறிப்பிட்டது. இதேவேளை, எரிபொருள் கொன்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் குறுகிய கால கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.