கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு

அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு

by Staff Writer 23-05-2022 | 2:32 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை வௌிநாட்டு பயணத்தடையை நீடித்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இன்று(23) உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்தில் அஜித் நிவாட் கப்ராலை மன்றில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட போது, நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டில், அஜித் நிவாட் கப்ரால் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். குறித்த முறைப்பாடு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பித்திருந்த போதிலும், அடுத்த தவணை விசாரணைக்கு அவர் மன்றில் ஆஜராகுவார் என அஜித் நிவாட் கப்ரால் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கூறியுள்ளார். இதன்போது சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உத்தரவிட்ட நீதவான், அதுவரை அஜித் நிவாட் கப்ராலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையையும் நீடித்து உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச பிணைமுறைகளுக்காக கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி கட்டணம் செலுத்தப்பட்ட தரப்பினரின் பெயர் பட்டியலையும் சமர்பிக்குமாறு முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், பிணை முறிகள் மற்றும் கட்டணம் செலுத்தியோரின் பட்டியலை அடுத்த தவணையின் போது மன்றுக்கு சமர்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு நீதவான உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் சமர்பித்த தனிப்பட்ட முறைப்பாட்டை ஆராய்ந்த நீதவான், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பித்திருந்தார். மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட போது, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.