HND மாணவர்களின் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

by Staff Writer 21-05-2022 | 6:13 PM
Colombo (News 1st) உயர் தேசிய டிப்ளோமா (HND) மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 'ரணில் - கோட்டா அரசாங்கம் வேண்டாம், மக்கள் ஆணைக்கு இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளில் HND மாணவர்களால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலிருந்து இன்று பிற்பகல் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை, உயர் தேசிய டிப்ளோமா மாணவர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச நிறுவனங்கள், உத்தியோகபூர்வ குடியிருப்புகளுக்குள் நுழைதல், அவற்றை சேதப்படுத்தல், அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தல், வன்முறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கு தடை விதித்து நீதவானால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோட்டை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதற்கமைவாக, கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட NSA சுற்றுவட்டத்திலிருந்து சைத்ய வீதி, ஜனாதிபதி மாவத்தை செரமிக் சந்தி முதல் யோர்க் வீதி சந்தி வரையிலும் வங்கி வீதி, கீழ் செத்தம் வீதி, பாரோன் ஜயதிலக்க மாவத்தை, முதலிகே மாவத்தை மற்றும் வைத்தியசாலை வீதி, கெனல் வீதியூடாகவும் HND மாணவர்கள் பயணிப்பதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.