மக்கள் சக்தியுடன் கைகோர்த்த அமெரிக்காவின் இரு பல்கலைக்கழகங்கள்

by Chandrasekaram Chandravadani 19-05-2022 | 10:38 AM
Colombo (News 1st) மக்கள் சக்தி செயற்றிட்டம் 2022 ஆம் ஆண்டுக்காக, அமெரிக்காவின் பிரவுன்ஸ் பல்கலைக்கழகத்தின் வொட்சன் நிறுவனம் (The Watson Institute at Brown University) மற்றும் ஆகன்ஸ்சாஸ் பல்கலைக்கழகத்தின் கிளின்டன் கல்லூரி (The Clinton School at the University of Arkansas) ஆகியவற்றுடன் பங்குதாரர் ஆவதாக இன்று(19) அறிவித்துள்ளது. அதற்கமைய, இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் பட்டங்களை பெறுவோர் மற்றும் பட்டங்களை பெற எதிர்பார்ப்போர் ஆகிய இரு தரப்பினரும் தங்களின் ஆய்வு செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக தெரிவுசெய்துள்ள செயற்றிட்டத்திற்காக மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படவுள்ளனர். 1764 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பிரவுன்ஸ் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் 7ஆவது பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். அதேபோன்று, ஆகன்ஸ்சாஸ் பல்கலைக்கழகத்தின் கிளையான கிளின்டன் கல்லூரி காணப்படுவதுடன் அது அமெரிக்காவின் ஜனாதிபதி கல்லூரிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் வீதி விஸ்தரிப்பு கட்டமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இலங்கையில் கிராமங்களில் வாழும் மக்கள் இன்று வரை எவ்வித அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத போராட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். விசேடமாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே கிராம மக்கள் எதிர்நோக்கும் முதன்மையான பிரச்சினையாகும். இதனைத் தவிர, காட்டு யானை - மனித மோதல் இலங்கையிலுள்ள கிராம மக்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பிரச்சினையாகும். இதன் விளைவாக மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், மறுபுறத்தில் காட்டு யானை வளமும் அழிக்கப்படுகின்றது. உயர் மற்றும் கீழ் மட்டத்தில் வருமானம் பெறும் குழுக்களிடையே அபரிமிதமான வருமான வித்தியாசம் ஏற்படுவதால் வறுமை மற்றும் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து எவரும் கண்டுகொள்வதில்லை. இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மக்கள் சக்தியின் மனிதநேய பணி ஆரம்பமானது.
'' பிரவுன்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையின் மனிதாபிமான சிக்கல்கள் தொடர்பில் பெறுமதியான அனுபவம் மற்றும் செய்றபாட்டு அறிவை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் சக்தி செயற்றிட்டத்துடன் கைகோர்த்துக்கொள்வதற்கு கிடைத்த சந்தர்ப்பம் குறித்து மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான கண்காணிப்பு மத்திய நிலையம் பெரும் மகிழ்ச்சியடைகின்றது. '' - செத் ஸ்டலன் - வொட்சன் நிறுவனம், பிரவுன்ஸ் பல்கலைக்கழகம்.
சர்வதேச செயற்றிட்டங்களின் மக்கள் சக்தி செயற்றிட்டம் விசேடமானது என கிளின்டன் கல்லூரியின் பீடாதிபதி விக்டோரியா எம் டிபிரான்செஸ்கோ தெரிவித்தார். கிளின்டன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மக்கள் சக்தி செயற்றிட்டத்துடன் இணைந்து செயற்பட கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொறிமுறை மாற்றம் மக்கள் சக்தி செயற்றிட்டமானது இரு தசாப்தத்திற்கு மேலாக இலங்கையின் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனிதநேய செயற்பாடாகும். அதேபோன்று கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை மக்கள் சக்தி செயற்றிட்டம் வழங்கி வருகின்றது. பல வருடங்களாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து பின்னர் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து குறித்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை மக்கள் சக்தி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான கிராம அபிவிருத்தி செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்து மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய பெருமை மக்கள் சக்தியை சாரும்.
'' பூகோள ஆய்வுகளை மேற்கொள்ளும் பிரபல்யமான இரு தரப்பினர் நூறு வீதம் இலங்கையில் மனித நேய செயற்பாட்டை முன்னெடுக்கும் மக்கள் சக்தியுடன் கைகோர்க்கின்றமை தொடர்பில் நாம் பெருமையடைகின்றோம் '' - ஷெவான் டெனியல் - மக்கள் சக்தி
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் இறைபதம் அடைந்த திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் சக்தி மனிதநேய பணியானது, 2021 ஆம் ஆண்டு குழுமத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்ற சஷி ராஜமகேந்திரனின் கீழ் தொடர்ச்சியாக அனைத்து கிராமங்கள் தோரும் முன்னெடுக்கப்படுகின்றது. இரு பல்கலைக்கழகங்களிலும் போட்டித்தன்மையான குழுக்களில் மிகவும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களில் தெரிவுசெய்யப்பட்ட கிளின்டன் கல்லூரியின் ரல்வ் பிரே மற்றும் எடம் வில்லியம்ஸ் (Ralph Bray & Adam Williams) ஆகியோரும் பிரவுன்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொதுமக்கள் செயற்பாடுகள் தொடர்பான வொட்சன் நிறுவனத்தின் ஹெலேனா இவென்ஸ் மற்றும் பி(F)ன் ப்லொம்குயிஸ்ட் (Helena Evans & Finn Blomquist-Eggerling) ஆகியோரும் மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.