உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

உக்ரைன் மீதான போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

by Bella Dalima 19-05-2022 | 5:54 PM
Colombo (News 1st) உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட 3 மாதங்களாகின்றது. இதனால் ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தடைப்பட்டுள்ளதால். ஏற்கனவே அதனை சார்ந்துள்ள நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் போரால் விரைவில் உலக நாடுகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதாகவும் இது ஏழை நாடுகளில் உணவு பாதுகாப்பின்மையை மோசமாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில், உக்ரைனில் இருந்து சமையல் எண்ணெய், கோதுமை, சோளம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. ரஷ்யாவின் உணவுப்பொருள் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது உணவுப்பொருட்களின் விலை 30% அதிகரித்துள்ளது.