சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சி: 24 மணித்தியாலங்களில் 47 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சி: 24 மணித்தியாலங்களில் 47 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சி: 24 மணித்தியாலங்களில் 47 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2022 | 5:16 pm

Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 18 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில், நேற்றிரவு 7.30 அளவில் மட்டக்களப்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17 ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை நாளை (20) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 21 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீட்டர் போல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காத்தான்குடி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பு – கிரான்குளம், தர்மபுரம் கடற்கரையில் நேற்றிரவு 11 மணியளவில் குறித்த 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 ஆண்களும் 04 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் பயணிக்க பயன்படுத்திய 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக வௌிநாட்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் புத்தளத்தில் கைது செய்யப்பட்ட 08 பேரும் சுய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சுயபிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வௌிநாட்டு முகவர் ஊடாக சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 8 பேரும் புத்தளத்தில் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.

வௌிநாடு செல்லும் நோக்கில் இவர்கள் கடந்த 17 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைதந்து விடுதியொன்றில் தங்கியுள்ளதுடன், வௌிநாட்டு முகவரினால் அறிவிக்கப்பட்ட கட்டணம் அதிகம் என தெரிவித்து மீண்டும் வவுனியா செல்லும் நோக்கில் அடுத்த நாள் காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கருவலகஸ்வெவ பகுதியில் வைத்து கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் தாயும் தந்தையும் மகனும் மேலும் 05 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரையான தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்