முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மீளாத்துயில் கொண்ட உறவுகள் நினைவுகூரப்பட்டனர்

by Staff Writer 18-05-2022 | 7:55 PM
Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 13 ஆவது வருடமாகவும் இம்முறை முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமயத் தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து பேரணியாக வருகை தந்தவர்களும் இந்த அஞ்சலியில் பங்கேற்றிருந்தனர். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க நினைவேந்தலில் பங்கேற்றனர். யுத்தத்தில் கையை இழந்த ஒருவரால் இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் பிரகடனத்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்டார் . இதேவேளை, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் பொத்துவில் மற்றும் வல்வெட்டித்துறையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இருவேறு பேரணிகள் இன்று முள்ளிவாய்க்காலை வந்தடைந்தன. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்திலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக இதன்போது சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு யாழ். குருநகரில் இன்று நடைபெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. யாழ்ப்பாணம் - வலி. கிழக்கு பிரதேசசபையிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வொன்று நடைபெற்றது. இதன்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவில் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினை​வேந்தல் நிகழ்வு, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாகவும் நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியிலும் யுத்தத்தில் மீளாத்துயில் கொண்ட உறவுகள் நினைவுகூரப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று மூடப்பட்டிருந்தன. அத்துடன், கிளிநொச்சி - சுண்டிக்குளம் சந்தியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை இன்று மோட்டார்சைக்கிள் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாகவும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - வாகரை, மாணிக்கபுரம் கடற்கரையின் முகத்துவாரத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. திருகோணமலை மூதூர் - சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றதுடன், அம்பாறை - பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் விஷேட ஆத்மா சாந்தி பூஜை இடம்பெற்றது.