இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி

by Staff Writer 17-05-2022 | 8:47 PM
Colombo (News 1st) இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். கந்தர்மடம் பகுதியிலுள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கொக்குத்தொடுவாய் மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வொன்று முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அருகில் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - கல்குடா, பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்று நடைபெற்றது. இதனிடையே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகன ஊர்தி இன்று முல்லைத்தீவை சென்றடைந்தது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகன ஊர்தி, கிளிநொச்சியிலிருந்து இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்தது. இதன்போது, கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொதுச்சுடர் ஏற்றலைத்தொடர்ந்து ஊர்தி முல்லைத்தீவு நோக்கி சென்றது. முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்த்தி முள்ளிவாய்க்கால் முற்றத்தினை நாளை (18) சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளால் இன விடுதலையை வலியுறுத்தி கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான பொத்துவிலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்தது. திருகோணமலை - சிவபுரி வைரவர் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி வவுனியாவை இன்று மதியம் வந்தடைந்தது. இதன்போது, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. குறித்த பேரணி மாங்குளம் ஊடாக நாளை முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது. இதனிடையே, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னெடுக்கப்படும் மற்றுமொரு பேரணியும் முல்லைத்தீவு மாங்குளத்தை இன்று வந்தடைந்தது. இந்த பேரணியில் சமயத்தலைவர்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். கிளிநொச்சி - பரந்தனிலிருந்து ஆரம்பமான குறித்த பேரணி மல்லாவியூடாக மாங்குளத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.