எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

எழுத்தாளர் Staff Writer

16 May, 2022 | 3:57 pm

Colombo (News 1st) மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

போதுமானளவு எரிபொருள் காணப்படுவதாகவும் அவற்றை விநியோகிக்கும் வரை வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார்.

டீசல் ஏற்றிய கப்பலொன்று நேற்று(15) நாட்டை வந்தடைந்ததாகவும் இந்திய கடன் வசதியின் கீழ் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் எரிபொருள் ஏற்றிய மேலும் 03 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெசாக் பூரணை தினம் காரணமாக நேற்று(15) எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று(16) ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டை வந்தடைந்துள்ள 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மருந்து, எரிபொருள், எரிவாயு, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் லொறிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டிய லொறிகள் தொடர்பான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்