ஐக்கிய அரபு அமீரக அதிபர் காலமானார்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்

by Bella Dalima 13-05-2022 | 6:34 PM
Colombo (News 1st) ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும் அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டு மக்களுக்கும் இஸ்லாமிய தேசத்திற்கும் உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவிற்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
என குறிப்பிடப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் அதிபராக இருந்து வந்தார். இவரது மறைவிற்குப் பிறகு ஷேக் கலீஃபா இரண்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் கலீஃபா, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபி அரசாங்கத்தின் ஆட்சியாளராகவும் இருந்தார்.