அலரி மாளிகை முன்பாக புதிதாக உருவாகியுள்ள No Deal Gama போராட்டக்களம் 

by Staff Writer 13-05-2022 | 3:28 PM
Colombo (News 1st) அலரி மாளிகைக்கு முன்பாக No Deal Gama எனும் பெயரில் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை மைனா கோ கம என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்து கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆட்சிக்கு வரும் அனைவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை எனவும், எந்தவொரு தலைவர் பதவியேற்றாலும், அவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்துவதற்கே இந்த ஆர்ப்பாட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலத்தின் போது தமது நலன்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடுவதாகவும் மக்கள் நலன் குறித்து அவர்கள் கரிசனை கொள்வதில்லை எனவும் அவர் கூறினார். இரண்டு நாட்களில் உணவையும் எரிபொருளையும் வழங்கி தமது குறிக்கோளை திசை திருப்ப முடியாது எனவும், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார். நெருக்கடியை தீர்ப்பதற்காக வௌிநாடுகளிலிருந்து கடன்களை தொடர்ந்தும் பெறுவது எதிர்கால சந்ததியினரை பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலேயே பதவிக்கு வரும் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் வகையில் 'No-Deal-Gama' போராட்டக்களத்தை ஸ்தாபித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.