முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

by Staff Writer 12-05-2022 | 8:46 PM
Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (12) ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மக்கள் எதிர்நோக்கிய துன்பங்களை நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. மன்னார் - பள்ளிமுனை பெருக்க மரத்தடியில் இன்று மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கஞ்சி காய்ச்சி வழங்கி வைத்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்கா முன்பாக ''முள்ளிவாய்க்கால் கஞ்சி" தயாரிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரவலத்தை குறிக்கும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி" தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.