முன்னாள் பிரதமர் மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை

by Staff Writer 12-05-2022 | 2:00 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்ஜீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன, நாமல் ராஜபக்ஸ, ரோஹித அபேகுணவர்தன, C.B.ரத்னாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுக பெரேரா, சனத் நிஷாந்த, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் அயுஷா ஜினசேன மன்றில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 09 ஆம் திகதி மைனாகோகம மற்றும் கோட்டாகோகம மீதான தாக்குதல்களை நடத்துவதற்கான சதி மற்றும் திட்டமிடலுடன் தொடர்பிருக்கலாமென எண்ணுவதால், அவர்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டுமென தெரிவித்து சட்டமா அதிபரால் இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.      

ஏனைய செய்திகள்