புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

by Bella Dalima 12-05-2022 | 6:40 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 - 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 2015 இல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தலில் அவர் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ஆகஸ்ட் 2015 பொதுத்தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 2018 ஒக்டோபரில் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிய அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, மிண்டும் 2018 டிசம்பரில் அவரை பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நவம்பர் 2019 இல், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். 1977 ஆம் ஆண்டு பியகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான ரணில் விக்ரமசிங்க, அவ்வேளையில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். பின்னர் அவர் பிரதி வௌிவிவகார அமைச்சராகவும் செயற்பட்டார். அதனையடுத்து, ரணில் விக்ரமசிங்க இளைஞர் விவகாரம், கல்வி , தொழில் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை வகித்ததுடன் சபை முதல்வராகவும் செயற்பட்டார். கல்வியியற்கல்லூரிகள், இளைஞர் சேவை மன்றம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் என்பன அவர் அமைச்சராக இருக்கும் போது அறிமுகப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களாகும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் திடீர் மறைவையடுத்து ரணில் விக்ரமசிங்க முதற்தடவையாக பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போதைய பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படும் ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலம் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தைக் கொண்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.