பிரதமர் பதவியை ஏற்கத் தயார்: சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதம் 

by Bella Dalima 12-05-2022 | 3:42 PM
Colombo (News 1st) பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கையையும் மகா சங்கத்தினரின் கோரிக்கையையும் ஏற்று இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், சில நிபந்தனைகளையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறுகிய கால எல்லைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் 02 வார காலத்திற்குள் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டும் சட்டவாட்சியை உறுதிப்படுத்தி விரைவில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்பன எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாகும் அத்துடன், இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் நாளைய தினம் புதிய அரசாங்கத்தை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்கும் தாம் தயாரென சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.