by Staff Writer 12-05-2022 | 8:05 PM
Colombo (News 1st) நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான தீர்மானங்களை எடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம் இன்று 34 ஆவது நாளை எட்டியுள்ளது.
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடாக, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வை காண முடியாதென சுட்டிக்காட்டும் போராட்டக்காரர்கள், ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.
அதுவரை தமது போராட்டத்தை அமைதி வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடையை நீக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீதான பரிசீலனையை ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது தொடர்பான முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமது கோரிக்கையை ஆராய்வதற்காக வேறொரு நாளை ஒதுக்குமாறு பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனூடாக பொலிஸாருக்கு இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதற்கான தேவை இல்லையென்பது புலப்படுவதாக பிரதம நீதவான் இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே, காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை அங்கிருந்து வௌியேற்றுமாறு தாம் எவ்வித கோரிக்கையையும் விடுக்கவில்லை என அந்த பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களின் முகாமையாளர்கள், தமது சட்டத்தரணிகள் ஊடாக இன்று மன்றில் சுட்டிக்காட்டினர்.
உறுதிப்பிரமாணம் ஊடாக அவர்கள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.
பொலிஸார் நீதிமன்றத்தில் பொய்யான தகவலை முன்வைத்துள்ளதாகவும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது விடயங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வழக்கு இடம்பெறும் திகதிக்கு முன்னதாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின், அது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு போராட்டக்காரர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் முன்னெடுக்கப்படுமென கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க அறிவித்துள்ளார்.