தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு ஆலோசனை 

by Staff Writer 11-05-2022 | 8:08 PM
Colombo (News 1st) தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கான அதிகாரத்தை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வன்முறையை தோற்றுவிக்கும் வகையில், செயற்படுவோரை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சட்டரீதியிலான அதிகாரங்களை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ஆலோசனை வழங்கியுள்ளது. வன்முறையைத் தூண்டும் தரப்பினர் உயிர்ச்சேதம் அல்லது கொள்ளையில் ஈடுபடும் நோக்கத்துடன் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், உயிர்ச்சேதம் மற்றும் காயமேற்படுத்தும் வகையிலான தாக்குதல்களை தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றிரவு ஊரடங்கு சட்ட விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும், சமூக ஊடகங்களில் தகவல்களை பகிரும்போதும் அதன் உள்ளடக்கம் தொடர்பிலும் அதன் ஊடாக ஏற்படக்கூடிய குற்றங்கள் தொடர்பிலும் புரிதலுடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.