மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை 

by Bella Dalima 10-05-2022 | 5:29 PM
Colombo (News 1st) மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்டத்தரணிகள், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்த கோரிக்கையை விடுத்தார். அலரி மாளிகைக்குள் திட்டமிட்டு குண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார். அலரி மாளிகைக்குள் செல்லும் போது அவர்களிடம் வாள், பொல்லுகள் என்பன இருக்கவில்லை எனவும் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் வௌியே வரும்போது பாரிய அளவிலான வாள்கள், பொல்லுகளை ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் கூறினார். இந்த குண்டர்கள், முதலில் மைனாகோகமவை தாக்க சென்றதையும் காணக்கூடியதாக இருந்ததாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார். இவர்கள் இவ்வாறு செல்லும் போது புலனாய்வு அதிகாரிகள் எங்கு சென்றார்கள் என அவர் கேள்வியெழுப்பியதுடன், போராட்டக்களத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு பொலிஸார் இடமளித்ததாகவும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய வன்னிநாயக்க, இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் உதவியதாக தெரிவித்தார். இதனால் இந்த குழுவிற்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க மேலும் தெரிவித்தார்.