சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 10-05-2022 | 2:31 PM
Colombo (News 1st) மக்களின் உரிமைகளை மீறி, அமைதியான போராட்டத்தில் தாக்குதல் நடத்த தலைமைத்துவம் வழங்கிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முழுமையான விசாரணையை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகருக்குள் ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அமைதியாக ஒன்றுகூடுவதற்கு உள்ள உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் சில வாரங்களாக எதிர்ப்பில் ஈடுபட்டு வந்ததாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினருக்கும் உள்ளதாகவும் சட்டமா அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட இடத்திற்குள் அதிகளவானோர் அத்துமீறி நுழைந்து முன்னெடுத்த நடவடிக்கை நாட்டின் அரசியலமைப்பை மீறும் குற்றம் எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.