மோதல்களில் 8 பேர் பலி; காயமடைந்த 232 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

மோதல்களில் 8 பேர் பலி; காயமடைந்த 232 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2022 | 8:30 pm

Colombo (News 1st) மக்கள் நேய மாற்றம் ஒன்றுக்காக ஒரு மாதத்திற்கு மேல் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது அலரி மாளிகையில் இருந்து வந்த சிலர் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பிரதேச சபை தவிசாளர் ஒருவரும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நான்கு பொதுமக்களும் அடங்குகின்றனர்.

நாடே களேபரமாகியிருந்தபோது நிட்டம்புவ நகரில் ஆத்திரமடைந்திருந்த இளைஞர்களிடம் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல நேற்று (09) சிக்கினார்.

இதன்போது, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வலுவடைந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினருடன் வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த மோதலில் சிக்கி பாராளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தனர்.

இந்த மோதலின் போது மீரிகம – ஹாபிட்டிகம, கல்எலிய பகுதியை சேர்ந்த 27 வயதான ஹர்ஷ நதீஷான் என்ற இளைஞரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இமதூவ பிரதேச சபையின் தவிசாளர் A.V. சரத் குமாரவும் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். வீட்டின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் காயடைந்த அவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

69 வயதான சரத் குமார இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவரது சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீரகெட்டிய பிரதேச சபையின் தவிசாளரது வீட்டு வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான யக்கஸ்முல்ல பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்லானின் ஜனாஸா இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.

32 வயதான அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

வீரகெட்டிய ஹீன் ஆர பகுதியை சேர்ந்த 38 வயதான சுகத் ஜானக்கவும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

ஆசிரியரான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அலரி மாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோது, அதற்காக பயன்படுத்தப்படுகின்ற துப்பாக்கியொன்று வெடித்ததில் கலகத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை, நீர்கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மினுவாங்கொடை – யட்டியன பகுதியை சேர்ந்த 21 வயதான பிரியந்த குமார உயிரிழந்தார்.

தாக்குதலில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் ஆத்திரமடைந்திருந்த இளைஞர்களிடம் சிக்கினார்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று நாள் முழுவதும் இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்த 232 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 217 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஐவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்