துரிதமாக மீளெழுச்சி கண்ட போராட்டக்களம்; Gota Go Home கோஷம் மீண்டும் வலுக்கிறது

by Bella Dalima 10-05-2022 | 7:33 PM
Colombo (News 1st) கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட போராட்டக்களம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என அங்கு கூடியுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து நாசப்படுத்திய தமது அறவழிப் போராட்டக்களமான கோட்டாகோகமவை மீள ஸ்தாபித்த மக்கள், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என மீண்டும் ஒருமித்து கோஷம் எழுப்பிய வண்ணமுள்ளனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 31 நாட்களாகின்றன. குண்டர்கள் அடித்து நொறுக்கிய தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட போராட்டக்களத்தை இளைஞர், யுவதிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து மீள ஸ்தாபித்துள்ளனர். அங்கிருந்த சிதைவுகள் அகற்றப்பட்டு, போராட்டக்களம் இன்று காலை மீண்டும் சுத்தப்படுத்தப்பட்டது. தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இன்று போராட்டக்களத்திற்கு சென்றிருந்தனர். பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி இளைஞர், யுவதிகள் விசாரணைக்கு உதவினர். இதேவேளை, இலங்கை ஜனநாயக ஆட்சி அமைப்பில் கெளரவமான இடமாகக் கருதப்படும் அலரி மாளிகை, நேற்று காலை முதல் போர்க்களமாக மாறியிருந்தது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர், யுவதிகள், தொழிற்சங்கத்தினர், மற்றும் நாட்டின் நாலா பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் மைனாகோகம போராட்டத்திற்கு தமது வலுவான ஆதரவை தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் அப்பகுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மகிந்த ராஜபக்ஸவிற்கு அலரி மாளிகைக்குள்ளேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திடீர் தாக்குதல்களால் ஆத்திரமடைந்த மக்கள், அலரி மாளிகைக்குள் நுழைய முயன்றபோது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அலரி மாளிகைக்கு அருகில், கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி வெடித்ததில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தமது கையிலிருந்த துப்பாக்கியை இயக்குவதற்கு முற்பட்ட வேளையில், அது வெடித்துள்ளமை தெரியவந்துள்ளது. அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இரண்டு தடவைகள் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்ட போதிலும் தொடர்ந்தும் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு செல்ல முற்பட்டனர். அலரி மாளிகை வளாகத்தில் காணப்பட்ட வாகனத்திற்கும் இதன்போது தீ வைக்கப்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டதுடன், கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை அலரி மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததாக அறிவித்து நேற்றிரவு வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அலரி மாளிகை பகுதியில் மைனாகோகம மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் மிக அமைதியுடன் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.