அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை

அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை 

by Staff Writer 07-05-2022 | 3:41 PM
Colombo (News 1st) நேற்று (06) நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வரும் நிலையில், அவசரகால பிரகடனம் தற்போதைய நிலைமைக்கு தீர்வாகாது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நெருக்கடி நிலையை முடக்குவதற்கு அவசரகால சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் சட்டத்தரணிகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாற்றமடையக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், போராட்டங்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. நாடும் மக்களும் எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியையும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைக்குத் தீர்வு காண வேண்டிய அவசரத் தேவையையும் உணர்ந்துகொள்ளுமாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அவசரகால நிலை ஏன் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணங்களை மக்களுக்கு உடனடியாக விளக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது. அவசர நிலை பிரகடனத்தை மீளப்பெறுமாறும், மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து வெளியிடும் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்டவைகளை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாகவு சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியானதாகவும் பொலிஸாரால் சாதாரணமாக கட்டுப்படுத்தக்கூடியதாகவும் முன்னெடுக்கப்படும் பின்புலத்தில், அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு தௌிவுபடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், கைது, தடுப்புக்காவலில் வைப்பது தொடர்பான அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய சுந்திர நடவடிக்கைகள், இந்த அவசரகால நிலையின் போது பாதிக்கப்படாது அல்லது அவமதிக்கப்படாது என தாம் நம்பிக்கை கொள்வதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டை மீண்டும் சுபீட்சத்தின் பாதைக்கு கொண்டு வருவதற்கு, இலங்கை மக்கள் எதிர்நோக்கும் உண்மையான சவால்களுக்கு நீண்டகால தீர்வுகள் அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார். அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது அதற்கு பயனளிக்காது எனவும் அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவசர நிலை பிரகடனம் தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான குடிமக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக இடம்பெறும் போது, அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதை புரிந்து கொள்ள முடியாதுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த வாரங்களில், கருத்து சுதந்திரத்தைக் கொண்ட பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததாக கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவசரகால சட்டத்தின் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கை பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதை ஒரு மாத கால அமைதியான ஆர்ப்பாட்டங்கள் சுட்டிகாட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது. அவசரகால சட்டம் எந்த வகையில் உதவக்கூடும் என்பதை கணிக்க முடியவில்லை என இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் பல வாரங்களாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்கள் தற்போது தீவிரமாகவும் நம்பகத்தன்மையுடனும் கவனிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கூறியுள்ளார். அவசரகால பிரகடனம் கவலைக்குரியது என இலங்கை மற்றும் மாலைதீவிற்கான நோர்வே தூதுவர் Trine Eskedal தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகிப்பதும், போராட்டங்கள் அமைதியாக முன்னெடுக்கப்படும் போதும் மற்றும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் போதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதும் கவலைக்குரியது என நோர்வே தூதுவர் ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக நோர்வே தூதுவர் Trine Eskedal கூறியுள்ளார். நிதானத்துடன் செயற்படுமாறு சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.