English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 May, 2022 | 3:36 pm
Colombo (News 1st) நெருக்கடி நிலையை தணிக்கும் குறுகிய கால நடவடிக்கையாகவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் நாடு வழமைக்கு திரும்பியவுடன் அவசரகால சட்டம் நீக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களில் அத்தியாவசியமான காரணியான அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தடையற்ற இயல்பு வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளுடன் கூடிய பல காரணிகளால் சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து மீளும் வகையில் அரசியல், பொருளாதார, சமூக அமைப்பில் ஆழமான சீர்திருத்தங்கள் தேவை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், குறுகிய காலத்திற்குள் அந்நிய செலாவணி முகாமைத்துவம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நெருக்கடிகளை சமாளிப்பதற்கு தேவையான சீர்த்திருத்தங்கள் குறித்து மகா சங்கத்தினர், ஏனைய மத குருமார்கள், பொருளாதார நிபுணர்கள், வர்த்தக சமூகம், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்டோர் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் பல சீர்திருத்த முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தியது.
பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளிப்பதே நாடு எதிர்கொள்ளும் உடனடி சவாலாகும்.
சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வலுவான மற்றும் ஸ்திரமான அரசாங்கத்தை கொண்டிருப்பது இந்த தருணத்தில் முதன்மையான தேவை என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியது.
நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் கடன் மறுசீரமைப்பிற்காக சர்வதேச நாணய நிதியம், முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மையும், சமூக அமைதியுமே இவையனைத்தையும் வெற்றிகொள்வதற்கான முக்கிய நிபந்தனைகளாகும்.
கடந்த பல நாட்களாக, தலைநகர் உள்ளிட்ட நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும், ரயில் மற்றும் பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வைத்தியசாலைகளின் நாளாந்த சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதால், நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆடைக்கைத்தொழில் உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் முடங்கியுள்ளதாகவும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாமலுள்ளதுடன், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதோடு, பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்தும் வழங்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக மாத்திரமே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை வழமைக்குத் திரும்பியவுடன் அந்த சட்டம் நீக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May, 2022 | 06:28 AM
07 May, 2022 | 03:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS