ஹொருகோகமயில் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

by Staff Writer 06-05-2022 | 8:25 PM
Colombo (News 1st) ''அரசாங்கத்தை துரத்தியடிப்போம், முறைமையை மாற்றுவோம்'' எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று (05) ஆரம்பித்த எதிர்ப்புப் பேரணி, பொலிஸாரின் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு மத்தியில் பொல்தூவ சந்தியை நேற்றிரவு வந்தடைந்தது. பின்னர் குறித்த இடத்திற்கு ஹொருகோகம என பெயரிடப்பட்டது. முழு நாட்டு மக்களுக்காகவும் பல சவால்களுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காக முன்னறிமுகம் இல்லாத மக்கள் உணவுப்பொதிகளை வழங்கியதை காண முடிந்தது. பொலிஸ் அதிகாரிகள் சிலர் அவ்விடத்திற்கு விரைந்ததையடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. ஒழுக்கம், அறிவாற்றல் ஆகியவற்றுடன் முன்நகர்கின்ற போராட்டங்களுக்குள், பல்வேறு எதிர்ப்பு முறைமைகள் கையாளப்படுகின்றன. அவ்வகையில், போராட்டத்திடலுக்குள் உள்ளாடைகளை காட்சிப்படுத்தும் போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஹொருகோகம போராட்டக்காரர்கள் பாராளுமன்றிற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் முற்றுகையிட்டு இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பாலம் சந்தியிலும் ஒரு சாரார் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வழியே வௌியேற முயற்சித்த போதும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாரால் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளில் உள்ளாடைகளை உலர்த்தி இவர்கள் எதிர்ப்பினை வௌிப்படுத்தினர். பாராளுமன்றத்திற்குள் காலத்தைக் கடத்தி, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கத் தவறுவதாகக் கூறி, மாதிவெல நுழைவிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்றிருந்தன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆளுந்தரப்பின் அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று மாலை சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. ஹொருகோகம மாணவர்களை அடக்கும் முயற்சியை தடுக்குமாறும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கான திகதியொன்றை வழங்குமாறும் சபாநாயகரை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை அங்கிருந்து வௌியேறினர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கடந்து செல்ல நேரிட்டது.