அக்கரைப்பற்றில் பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் அமைதியின்மை; 13 பேர் காயம்  

by Bella Dalima 06-05-2022 | 10:53 AM
Colombo (News 1st) அம்பாறை - அக்க​ரைப்பற்று, பாலமுனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேரும் மேலும் மூவரும் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 10 முதல் 11 மணிக்குள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உத்தரவை மீறி பொலிஸ் வீதித்தடையை கடந்து சென்றதாகவும் குறித்த நபர் வழுக்கி வீழ்ந்தமையினால் காயமடைந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த பகுதிக்கு வருகைதந்த பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளரும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுள் 10 பேர் இன்று மாலை வைத்தியசாலையிலிருந்து வௌியேறினர்.