பாராளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

by Bella Dalima 06-05-2022 | 3:24 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - தியத்த உயன பாராளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பாராளுமன்றம் அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களினுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்திற்குள் முறையாக பேசப்படவில்லை என தெரிவித்து, பொலிஸ் பாதுகாப்பு அரண்களை தகர்த்துவிட்டு பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு இன்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்தது. மாணவர்கள் பாராளுமன்றத்தை அடைவதைத் தடுக்கும் வகையில் வீதித்தடைகள் இடப்பட்டிருந்த போதும், மாணவர்கள் முதலாவதாக இடப்பட்டிருந்த வீதித் தடையை அகற்றி முன்நோக்கிச் சென்றனர். இதனையடுத்து, பொலிஸார் அவர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்தனர். பொலிஸாரின் தாக்குதல்களை நன்கு அவதானித்து வந்த மாணவர்கள், பொலிஸாரினால் வீசப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளை பொலிஸாரின் பக்கமே மீள எறிந்தனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட நீர்த்தாரை பிரயோகத்தையும் மாணவர்கள் சவாலாக எதிர்கொண்டதைக் காண முடிந்தது. இந்நிலையில், அடுத்த பாராளுமன்ற அமர்வு வரை மாணவர்கள் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளனர். ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.