பொலிஸ் வாகனங்களை அகற்றுமாறு கோரி மனு தாக்கல்

மைனாகோகமவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் வாகனங்களை அகற்றுமாறு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் 

by Staff Writer 04-05-2022 | 5:47 PM
Colombo (News 1st) அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பிரதமர் உள்ளிட்ட அவரது அதிகாரிகள் செயற்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டக்களத்தை மறித்து, பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் பொலிஸ் ட்ரக் வாகனங்களை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டுள்ளது. ஒலிபெருக்கிகள் ஊடாக அநாவசியமான முறையில் ஒலி எழுப்புவதை தடுக்குமாறு உத்தரவிடுமாறும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குள்ள அடிப்படை மனித உரிமையை பாதுகாக்குமாறும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானிக்குமாறும் இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்க வேண்டுமென உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சட்டத்தரணி ஷானிகா சில்வா மற்றும் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டன்கன் குணவர்தன, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்