பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பாராளுமன்றத்தை அண்மித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு 

by Staff Writer 04-05-2022 | 4:44 PM
Colombo (News 1st) நாளையும் (05) நாளை மறுதினமும் (06) பாராளுமன்றத்தை அண்மித்து முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தலங்கம பொலிஸார், மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக்க உள்ளிட்டோரினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, இன்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்தனர். பொலிஸாரின் கோரிக்கை சட்டத்திற்கு முரணானது எனவும் அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தினூடாக வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை மறுக்கும் வகையில் செயற்படுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லையெனவும் சட்டத்தரணிகள் குழாமினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நாளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள எந்தவொரு ஒன்றுகூடலுக்கு எதிராகவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டாமென நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது எனவும் சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கடுவெல நீதவான், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார். பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாடடில் இளைஞர்கள் 13 பேர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.