நான் ஒன்றும் அண்ட்ராய்ட் இயந்திரம் கிடையாது

சாதாரண பயனர்கள் மாத்திரம் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம்: எலான் மஸ்க் தெரிவிப்பு

by Bella Dalima 04-05-2022 | 4:05 PM
Colombo (News 1st) சாதாரண பயனர்கள் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால், வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும் அரசாங்க பயனர்களுக்கும் ட்விட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். Tesla மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk)சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து, ட்விட்டரை அவர் சீரழித்துவிடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போதைய ட்விட்டர் நிறைவேற்று அதிகாரியாகவுள்ள பராக் அகர்வால் இனி ட்விட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார். பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க், பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. எனினும், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு அண்ட்ராய்ட் இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்கப் பார்க்கிறேன். பொதுவாக நரகத்திற்கான பாதையே நல்ல நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது என்ற வாக்கியம் உண்டு. என்னை பொறுத்தவரை கெட்ட நோக்கங்களுடன் தான் நரகத்திற்கான சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், அதிலும் நல்ல எண்ணங்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. என்னுடைய நல்ல எண்ணம் நரகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லாது
என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக ட்விட்டர் இருக்கும் எனவும் சாதாரண பயனர்கள் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம், ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும் அரசாங்க பயனர்களுக்கும் ட்விட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.