சில பிழையான தீர்மானங்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: நிதி அமைச்சர் தெரிவிப்பு 

by Bella Dalima 04-05-2022 | 8:54 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போதுள்ள வௌிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இரண்டு வருடங்களிலேனும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என தாம் நினைக்கவில்லை எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் 7 பில்லியன் வெளிநாட்டு நாணய கையிருப்பு இருந்த போதும், வரியின் பெறுமதி அதிகரித்து சென்ற காலப்பகுதியில் வரியைக் குறைத்து வரலாற்றுத் தவறை செய்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும், கடந்த இரண்டு வருடங்களில் 8 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்தியுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நாடு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என குறிப்பிட்ட நிதி அமைச்சர், ரூபாவை இதற்கு முன்னரே படிப்படியாக நெகிழ்வுப்போக்குடன் விட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இரண்டு, அல்லது மூன்று வருடங்களினுள் மேற்கொண்ட சில பிழையான தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உதவியுள்ளதாகவும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பி, வௌிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்தார்.
நாங்கள் மீண்டும் எமது சந்தை வரியை பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, கடன்களை மறுசீரமைத்து மீண்டும் சந்தைக்குள் பிரவேசித்து முதலீடுகளை அல்லது கடனைப் பெற்று நிலைமையை சீரமைக்க வேண்டும் . இந்த பொறிமுறைகளை விடுத்து வேறு எந்த வழியிலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.... நான் பொருளாதார நிபுணர் இல்லை. எனக்கு முடியுமான சக்தியைப் பயன்படுத்தி எனது விடயதானங்களை மேற்கொள்வேன். பொருளாதார நிபுணர்கள் இருந்தால் அனுப்புங்கள். இதனை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்
என அலி சப்ரி பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.