இளைஞர்கள், பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களால் பாராளுமன்றம் அருகில் அமைதியின்மை

இளைஞர்கள், பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களால் பாராளுமன்றம் அருகில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

04 May, 2022 | 8:20 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டதாக தெரிவித்து இன்று (04) பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர்.

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்நோக்கி நகர்த்துமாறு சபாநாயகரை வலியுறுத்தும் நோக்கில் இளைஞர், யுவதிகள் இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் ஒன்றுகூடினர்.

சபாநாயகரின் பிரதிநிதி ஒருவரிடம், அந்த கோரிக்கை அடங்கிய ஆவணத்தை அவர்கள் கையளித்தனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் ஆவணம் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டிலுள்ள நெருக்கடியான நிலைமையை தீர்க்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என தெரிவித்து, பாராளுமன்றத்தின் ஜயந்திபுர நுழைவாயிலுக்கு அருகில் இளைஞர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

திடீரென அங்கு பஸ்ஸில் சென்ற பொலிஸார், இளைஞர்களை கைது செய்தனர்.

இதன்போது, 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

சட்டத்தரணிகளும், மேலும் சில இளைஞர்களும் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த சந்தர்ப்பத்தில், அங்கு நுழைவாயில் மூடப்பட்டிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலரும் அங்கு வருகை தந்திருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்களை கடுவெல நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, பாராளுமன்ற நுழைவாயில் அருகில் இருந்த மற்றுமொருவரை இன்று மாலை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு முதல் பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் இரும்பு வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் அனைத்து பகுதிகளையும் மறைக்கும் வகையில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பாராளுமன்றத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டமை மற்றும் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ஜனாதிபதியை பதவி விலகுமாறும் பாராளுமன்றத்தை கலைக்குமாறும் வலியுறுத்தி கொழும்பு மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் முன்னெடுத்த பேரணி இன்று பிற்பகல் 4 மணியளவில் பாராளுமன்ற சுற்றுவட்டத்தை நெருங்கியது.

பொலிஸ் வீதித் தடைகளை அகற்றிய மாணவர்கள் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு மத்தியில் இருந்த ஒரு சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அமைதியின்மை ஏற்பட்டது.

சில மணித்தியாலங்களாக தமது எதிர்ப்பை வௌிப்படுத்திய மாணவர்கள் பின்னர் கலைந்துசென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்