ஜனநாயக மாற்றங்களைக் கோரி 25 நாட்களாக தொடரும் போராட்டம் 

ஜனநாயக மாற்றங்களைக் கோரி 25 நாட்களாக தொடரும் போராட்டம் 

எழுத்தாளர் Staff Writer

03 May, 2022 | 8:30 pm

Colombo (News 1st) நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழித்த ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனநாயக மாற்றங்களைக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக 25 ஆவது நாளாகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மகா சங்கத்தினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டக் களத்திற்கு வருகை தந்து ​தொடர்ச்சியாக தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்திலும் இன்று காலை விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

இதனிடையே, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிக்குமார் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி, காலி முகத்திடல் போராட்டக் களத்தை இன்று சென்றடைந்தது.

இந்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகியிருந்தது.

இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக 9 ஆவது நாளாகவும் மைனாகோகம எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக் களத்தில் ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக எம்பிலிப்பிட்டியவில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு “மரணிக்கும் தறுவாயில் உள்ள இலங்கைத் தாயின் மரணத்திற்கு முன்பாக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு இசைக்கப்படும் மரண மேளம்” என பெயரிடப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து இவர்கள் காலி முகத்திடல் வரை பேரணி ஒன்றை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய, அடுத்த ஆறு நாட்களில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காலி முகத்திடலை அடையவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இன்று தலவாக்கலை நகரில் இருந்து சசி என்பவர் நடை பவனியை ஆரம்பித்துள்ளார்.

தலவாக்கலை நகர சுற்றுவட்ட மையத்தில் இருந்து அவரது நடைபவனி ஆரம்பமானது.

இதனிடையே, இராகலையில் இருந்து கோட்டாகோகம வரை பயணத்தை ஆரம்பித்த மணிவேல் சத்தியசீலன், கோட்டாகோகமவை வந்தடைந்தார்.

ஹட்டனில் மலையக இந்து மத குருமார் உள்ளிட்ட சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை நிவர்த்திக்கக் கோரி இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்