by Staff Writer 01-05-2022 | 3:31 PM
Colombo (News 1st) சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்(01).
பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இம்முறை ஆளும் கட்சியினால் மே தின கூட்டமோ பேரணியோ ஏற்பாடு செய்யப்படவில்லை.
அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள மக்களுக்காக ஒருமித்த கருத்திற்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் மீண்டும் அழைப்பதாக மே தின செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டுசெல்ல ஒன்றிணையுமாறு உழைக்கும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அழுத்தங்களில் இருந்து தொழிலாளர்களை மீட்டெடுப்பதற்கும் நிலவும் சிக்கலான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு, முதலில் அனைவரும் கைகோர்த்து இந்த சவாலை முறியடிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.