by Staff Writer 30-04-2022 | 4:31 PM
Colombo (News 1st) அவசர நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான இலங்கைக்குழு வாஷிங்டன் DC-க்கு விஜயம் செய்திருந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறுகிய மற்றும் நடுத்தர கால, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து, இலங்கை பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடினர்.