வான்வழித் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ரஷ்யா 

ஐ.நா பொதுச்செயலாளரின் விஜயத்தின் போது வான்வழித் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ரஷ்யா 

by Bella Dalima 30-04-2022 | 6:35 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் António Guterres-இன் விஜயத்தின் போது Kyiv மீது வான்வழித் தாக்குதல் நடத்தியமையை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் தலைநகர் Kyiv-இல் ஐ.நா. பொதுச்செயலாளர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துகொண்டிருந்த போது அப்பகுதியை அண்மித்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் காயமடைந்தனர். இம்மாதம் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் ஐ.நா. பொதுச்செயலாளரின் விஜயத்தின் போது மீண்டும் தொடங்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த தினத்தில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதை ரஷ்யா இன்று உறுதிப்படுத்தியுள்ளது. உயர் ரக நுட்பங்களைக் கொண்ட ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடனடியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், ஐ.நா மற்றும் அதன் பிரதிநிதித்துவத்தை அவமானப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சியென உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மதிக்காத ரஷ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக ஜெர்மனி விமர்சித்துள்ளது. உக்ரைனில் போர்க்குற்றம் புரிந்ததாக ரஷ்யா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.