ரவூப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் நசீர் அஹமட் 

ரவூப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் நசீர் அஹமட் 

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2022 | 6:08 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.

நடந்தவற்றை உரியவாறு சமூகத்திடம் ஒப்புவிக்கும் பொறுப்பிலிருந்து தாமும் கட்சியின் தலைவரும் நழுவி விட முடியாது என அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் யார் குற்றவாளி அல்லது சுற்றவாளி என்பதையும் எவரது பொறுப்புகள் சமூகக் கட்டமைப்பிலிருந்து நழுவியது என்பதையும் சமூகமே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தத்திற்கு தான் உட்பட H.M.M.ஹாரிஸ், பைசல் காசிம், M.S. தௌஃபீக் ஆகியோர் ஆதரவளித்ததன் பின்புலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், அவை இடம்பெற்ற இடங்கள் இன்றும் எழுந்தமானமான கதைகளாகவே உள்ளதாக நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதன் உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் அதனை ஆதாரபூர்வமாக முழு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அனுமதியுடனேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்ததாக அமைச்சர் நசீர் அஹமட் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏறாவூரில் நேற்று (29) பதிலளித்திருந்தார்.

இந்த ஊரை சேர்ந்த ஒருவர் அமைச்சு பதவி எடுத்துள்ள விவகாரம் மிக மோசமான விமர்சனத்திற்கான விவகாரமாக மாறியுள்ளது என்பது சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. அது ஊரும் அங்கீகரிக்கின்ற விடயம் அல்ல. ஆனால், அவர் தாமாக சென்று அரசியல் தற்கொலை செய்துகொண்டுள்ளதையிட்டு அலிசாஹிர் மௌலானாவிற்கு ஆத்ம திருப்தி இருக்கும். தலைமைக்கு எதிராக தாறுமாறாக பேசிக்கொண்டு திரிகின்றவர்கள் ஏன் இவற்றை அவர்கள் பிரசன்னமாக இருந்த அரசியல் உச்சபீடத்தில் கதைக்கவில்லை என்பது தான் மிக பிரச்சினைக்குரிய விடயம். ஒவ்வொரு அரசியல் உச்சபீடக் கூட்டத்தின் முழுமையான அதன் பதிவுகள் இருக்கின்றன. தேவை என்றால் பதிவுகள் வௌியில் கொண்டுவரப்படும். முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது. நடவடிக்கைகள் எடுக்கும் விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டாலும் நாங்கள் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக தான் சற்று நேரம் எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் கராரான நடவடிக்கைகளை சரியாக எடுத்துள்ளோம்

என ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்