ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது

தேசிய இணக்க அரசாங்கத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது:  ஜயந்த சமரவீர தெரிவிப்பு 

by Staff Writer 29-04-2022 | 4:10 PM
Colombo (News 1st) தேசிய இணக்க அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய இணக்க அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்து, அதனூடாக பிரதமர் மற்றும் அமைச்சரவையை பெயரிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டார். ஜனாதிபதியின் தலைமையில் இந்த தேசிய சபை நியமிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். தேசிய இணக்க அரசாங்கத்திற்கான பிரதமர் யார் என்பது குறித்தும் நாட்டின் தற்போதைய நெருக்கடியில் தேவையான அமைச்சுகளின் எண்ணிக்கை தொடர்பிலும் தேசிய சபையினூடாகவே தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்தார். யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்பது குறித்தும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பிலும் தேசிய சபையே தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.