கீர்த்திரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B.கீர்த்திரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

by Staff Writer 29-04-2022 | 9:04 PM
Colombo (News 1st) ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B.கீர்த்திரத்ன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கேகாலை நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்த கட்டளையிட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B.கீர்த்திரத்ன, நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் பாதுகாப்பில், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்னவின் மருத்துவ அறிக்கையினையும் பெற்றுக்கொள்ளுமாறு கேகாலை நீதவான் கொழும்பு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். குண்டசாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் அதிகாரிகள் மூவரினதும் மருத்துவ அறிக்கையை கண்டி வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் ஊடாக பெற்றுத்தருமாறும் கேகாலை நீதவான் வாசனா நவரத்ன தெல்தெனிய நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் தர்மரத்ன தமக்கு கட்டளையிட்டதாக அண்மையில் சாட்சியம் வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கமைய, சாட்சியங்களின் அடிப்படையில் அந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நாளில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மற்றில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டார். எதிர்வரும் 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 19 ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ரம்புக்கனையில் வசிக்கும் 41 வயதான சாமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தார். இதேவேளை, கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B.கீர்த்திரத்னவை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.