ரம்புக்கனை சம்பவத்தில் கைதான பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

ரம்புக்கனை சம்பவத்தில் கைதான பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

ரம்புக்கனை சம்பவத்தில் கைதான பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2022 | 3:59 pm

Colombo (News 1st) ரம்புக்கனை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலையின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B. கீர்த்திரத்னவையும் ஏனைய 03 பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை பிராந்தியத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B. கீர்த்திரத்னவை, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கேகாலை பிராந்தியத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B. கீர்த்திரத்ன, நாராஹென்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த, கேகாலை பிராந்தியத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B. கீர்த்திரத்ன கட்டளை பிறப்பித்தமைக்கு அமைய, ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்களை கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவிற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்