விற்பனையின் போது துல்லியமான தரவுகள் கட்டாயம்

பொருட்கள் விற்பனையின் போது துல்லியமான தரவுகளை கட்டாயப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

by Staff Writer 28-04-2022 | 11:31 AM
Colombo (News 1st) பொருட்களின் விற்பனை தொடர்பான துல்லியமான தரவுகளை கட்டாயமாக்கும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விநியோகத்தர்கள், களஞ்சியசாலை உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்பட்டு கொள்கலன்களில் அல்லது விற்பனை நிலையங்களில் வைத்திருக்கும் பொருட்களுக்கு இந்த வர்த்தமானி பொருந்தும். அதற்கமைய, பொருளொன்றை தமக்கு விநியோகித்த உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வர்த்தகரினால் வழங்கப்படும் எழுத்துமூல அல்லது அச்சிடப்பட்ட வகையிலான பற்றுச்சீட்டினை வர்த்தகர்கள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தவிர பொருளை வழங்குபவரின் பெயர், விலாசம், கொள்வனவு செய்த திகதி, விலை, பொருள் வகை, நிறை, பொருள் இலக்கம் என்பன பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால் மாத்திரமே குறித்த பொருளை வழங்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தத் தகவல்கள் அடங்காத பொருட்களை விற்கவோ, சேமித்து வைக்கவோ, விநியோகிக்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலூடாக தெரிவித்துள்ளது.