ஆயிரம் தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்; பொதுமக்களிடமிருந்து பேராதரவு

by Staff Writer 28-04-2022 | 8:07 PM
Colombo (News 1st) இலங்கையின் அண்மித்த வரலாற்றில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும்  ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் பொதுப்போக்குவரத்து, பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அன்றாட செயற்பாடுகள் இடம்பெறவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ரயில் சாரதிகள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டமையினால் இன்றைய தினம் ரயில் சேவையும் இடம்பெறவில்லை. அநேகமான பிரதேசங்களில் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை. பாடசாலை போக்குவரத்து சேவையும் இன்று தடைப்பட்டது. அதிகளவிலான ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்துவிட்டு பாடசாலைகளுக்கு செல்லவில்லை என்பதுடன், மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கொழும்பு நகரில் அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன், தனியார் பிரிவு ஊழியர்களும் தேசிய போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன், சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்த 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று மருதானை தொழில்நுட்ப சந்தியிலிருந்து பேரணியை ஆரம்பித்தன. தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று இலங்கை மத்திய வங்கிக்கு முன்னால் கூடியது. வௌிநாட்டு நாணய கறுப்புச்சந்தை மாஃபியாவை தடுத்து, வங்கிக் கட்டமைப்பை பாதுகாக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் , வங்கிகள் மேற்பார்வை பிரிவு பணிப்பாளர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோரிடம் கையளிப்பதற்காக மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை இவர்கள் பேரணியாக சென்றனர். தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் சில இணைந்து மற்றுமொரு பேரணியை லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்தன. ஜனாதிபதி செயலகம் நோக்கி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலானவர்கள் இன்று காலி முகத்திடலில் கூடினர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த ஆசிரியர்கள், மக்களின் போராட்டத்துடன் இணைந்ததுடன், மாணவர்களுக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பொலன்னறுவை திம்புலாகல ருகுணுகம ரத்னாலங்கார தேரர் நேற்றிரவு முதல் போராட்டக்களத்தில் சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். முதலாம் குறுக்குத்தெரு மற்றும் இரண்டாம் குறுக்குத்தெருவிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், வர்த்தக சமூகத்தினரும் போராட்டக்களத்திற்கு சென்று தமது ஆதரவை தெரிவித்தனர். இதேவேளை, இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அரச நிறைவேற்று அதிகார அதிகாரிகளும் விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக ஜனாதிபதி அலுவலகம் வரை சென்றனர். இலங்கை நிர்வாக சேவை சங்கம் சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அழகியற்கலை பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேரணியாக லிப்டன் சுற்றுவட்டத்தை அடைந்தனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் கொழுப்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடைபெற்றது. கிராம மக்களும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று மாத்தறையில் இன்று நடைபெற்றது. மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காத கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று குருநாகல் நகரில் நடைபெற்றது. விவசாயிகளும் தமது உபகரணங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று பதுளையிலும் இரத்தினபுரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புத்தளம் மாவட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிலாபம் நகரில் இருந்து பேரணியை ஆரம்பித்தனர். சிலாபம் - கொழும்பு பிரதான வீதியூடாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலாபம் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரம்புக்கனையில் அண்மையில் தூப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்தும் பேரணியொன்று ஆரம்பமானது. இதில் அரச ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். அரசாங்க ஊழியர்கள், தனியார் பிரிவு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நுவரெலியாவில் நடைபெற்றது. தபால், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளையும் சேர்ந்தவர்கள் இன்று கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி லிந்துலை எல்ஜின், மெராயா, லிப்பகலை, கவுலினா, திஸ்பனை, என்போல்ட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மெராயா நகரத்திலிருந்து பேரணியாக திஸ்பனை சந்தி வரை சென்றனர். இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வீட்டின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா - கந்தப்பளை நகரிலும் மக்கள் இன்று ஆரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்லோஜ் , பார்க் தோட்டம், கொன்கோர்டியா , எதர்செட் பிரிவு, நோனாதோட்டம், எஸ்கடேல் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நுவரெலியா ஹைபொரஸ்ட் தோட்ட மக்கள் ஹைபொரஸ்ட் இலக்கம் 3 பிரதான வீதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கண்டித்தும் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என கோரியும் நுவரெலிய - லபுகல்ல தோட்ட மக்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். லபுகல்ல தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்பாக ஆரம்பமான பேரணி கண்டி - நுவரெலிய பிரதான வீதியினூடாக லபுகல்ல கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் வரை சென்றதை அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஹப்புத்தளையிலும் தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிட்டரத்மலை, தம்பேதென்ன, காகொல்ல, ரொஹென்டன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பத்தனை திம்புள்ள பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திம்புள்ள, கெலிவத்தை, போகவத்தை, கொலபத்தனை, குயின்ஸ்பெரி தோட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தனை - டிம்புள்ள தோட்ட மக்கள் இன்று தங்களின் வீடுகளில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். அத்துடன், தோட்ட மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புஸ்சலாவ - ரொக்சைல்ட் நோனா தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். நோனா தோட்ட முருகன் ஆலயத்திலிருந்து பேரணியாக சென்ற மக்கள் ரொச்சைல்ட் புதிய தொழிற்சாலை வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை - எல்கடுவ பிரிவிற்குட்பட்ட இரத்வத்த மேற்பிரிவு மற்றும் கீழ்ப்பிரிவு தோட்ட மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புபுரஸ்ஸ மேல் பிரிவு தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர். கம்பளை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று மூடப்பட்டிருந்ததுடன், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இன்று நகரில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். இதனிடையே, திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியர்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தளம் மாவட்ட அரசாங்க தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஊழியர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஊழியர்கள் இன்று முற்பகல் முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது. இதனால் மரக்கறி விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் மரக்கறி லொறிகளும் சேவையில் ஈடுபடவில்லை. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி விவசாயிகளும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பொலன்னறுவையில் ஆரம்பமான விவசாயிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி கந்துவெல நகரை சென்றடைந்தது. இதனால் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தடைப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டின் முன்பாகவும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, அகில இலங்கை விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி கல்கமும பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை நாடளாவிய ரீதியில் இன்று பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. மட்டக்களப்பு இலங்கை வங்கி பொது ஊழியர் தொழிற்சங்கம் மட்டக்களப்பு நகர் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தது. காந்தி பூங்காவில் இருந்து தாண்டவன்வௌி சந்தி வரை பேரணியாக சென்றவர்கள் மீண்டும் காந்தி பூங்காவில் கூடி எதிர்ப்பை வௌிப்படுத்தினர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பலகாமம் பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தம்பலகாமம் நான்கு வாயில் சந்தியில் இருந்து ஆரம்பித்து பேரணியாக சென்றவர்கள், பின்னர் தம்பலகாமத்தில் கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் செய்தனர். அங்கிருந்து பாலம்போட்டாறு வரை சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை நகரில் அரச நிர்வாக அதிகாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டம் முனனெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ். மாவட்ட இலங்கை வங்கி கிளையின் ஊழியர்களும் பஸ் நிலையத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை என செய்தியாளர் தெரிவித்தார்.    

ஏனைய செய்திகள்