அச்சுறுத்துகிறது ரஷ்யா: போலந்து குற்றச்சாட்டு

எரிவாயு விநியோகத்தை நிறுத்தி அச்சுறுத்திப் பார்க்கிறது ரஷ்யா: போலந்தும் பல்கேரியாவும் குற்றச்சாட்டு

by Bella Dalima 27-04-2022 | 6:12 PM
Colombo (News 1st) போலந்து, பல்கேரியாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அவசர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும், நிலைமையை சமாளிப்பதற்கான உடனடி திட்டங்கள் உள்ளதெனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. தமது நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தியமை, அச்சுறுத்திப் பார்க்கும் நடவடிக்கை என போலந்தும் பல்கேரியாவும் ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளன. ரஷ்யாவின் எரிவாயு நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ளதாக பல்கேரியா குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, நிலைமையை தம்மால் சமாளிக்க முடியும் என போலந்து குறிப்பிட்டுள்ளது. மேற்குலக நாடுகளுக்கிடையில் பிரிவினையை உருவாக்க ரஷ்யா முயல்வதாக போலந்து பிரதி வௌிவிவகார அமைச்சர் Marcin Przydacz தெரிவித்துள்ளார். சக்தி வழங்கல் நாடாக ரஷ்யாவின் நம்பகமற்ற தன்மையையே இந்த புதிய முன்னெடுப்பு காட்டுவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் Ursula von der Leyen தெரிவித்துள்ளார். நட்புறவற்ற நாடுகள் எரிவாயுவிற்கான கட்டணத்தை Ruble-களில் செலுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் விநியோக நடவடிக்கைகள் குறைக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவுறுத்தியிருந்தது. எனினும், அவ்வாறு பணம் வழங்க இரு நாடுகளும் மறுத்துவிட்டன. இதனைத் தொடர்ந்து போலாந்து, பல்கேரியாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியது. போலந்து 53% எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்ததுடன், பல்கேரியா 90% எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக்கொண்டது.