மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி

மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு 

by Bella Dalima 26-04-2022 | 5:38 PM
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. Radio Liberty வெளியிட்டிருக்கும் தகவலின் படி, Planet Labs செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படங்களைக் கொண்டு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான் பிரான்ஸிக்கோவை தலைமையகமாகக் கொண்ட புவியியல் புகைப்பட நிறுவனம், மரியுபோலின் ஸ்டார்யி க்ரிம் கிராமத்தில் 200 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய புதைகுழி இருப்பதை அப்புகைப்படங்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. முதல் புகைப்படம் மார்ச் 24ஆம் திகதி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 3 மிக நீண்ட பள்ளங்கள் இருப்பதும், அதன்பிறகு ஏப்ரல் 7 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அந்த நீண்ட பள்ளமானது பெரிதாக்கப்பட்டுள்ளமையும், அதில் சில பகுதிகளில் பள்ளமானது வெகு அண்மையில் தோண்டி மூடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம், புதிதாக மிகப்பெரிய புதைகுழி தோண்டப்பட்டிருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் நீளம் 200 மீட்டர் அளவிற்கு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்யி க்ரிம் கிராமத்தை மார்ச் 10ஆம் திகதி ரஷ்ய படைகள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.