ஜனாதிபதியும் பிரதமரும் பதவி துறக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ந்தும் போராட்டம் 

by Bella Dalima 26-04-2022 | 8:12 PM
Colombo (News 1st) கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள தன்னெழுச்சி மக்கள் போராட்டத்தின் 18 ஆவது நாள் இன்றாகும். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பேரணியை முன்னெடுத்த விவசாய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டக்களத்திற்கு வருகை தந்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தினரும் போராட்டக்களத்திற்கு பேரணியாக வருகை தந்தனர். இதேவேளை, கண்டியிலிருந்து பேரணியொன்றின் மூலம் மூன்று இளைஞர்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு வருகை தந்தனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் போராட்டக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு இன்று புத்தகங்களை அன்பளிப்பு செய்தனர். இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு கோரி காலி வீதியில் அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 'மைனாகோகம' என இந்த ஆர்ப்பாட்டக்களத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மகா சங்கத்தினர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்கு அனுமதியளிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நேற்று நிராகரித்தார். போராட்டக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களை வீதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.   இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டினர்.   சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் கோட்டாகோகமவிலுள்ள இளைஞர், யுவதிகள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். காலியிலுள்ள கோட்டாகோகம கிளையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கண்டி நகரில் செயற்படுத்தப்பட்டுவரும் கோட்டாகோகம கிளையில் 10ஆவது நாளாகவும் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடத்தப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சட்டத்தரணிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மக்களின் இறைமைக்கு தலை வணங்குவோம் எனும் தொனிப்பொருளில் பதுளை சட்டத்தரணிகள் ஒன்றியத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.