by Staff Writer 24-04-2022 | 2:49 PM
Colombo (News 1st) தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.
காலத்துக்கேற்ற தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் IMF குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான வேலைத்திட்டம் தொடர்பிலான ஆரம்பகட்ட தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான வேலைத்திட்டத்திற்கான அதிகாரிகளின் கோரிக்கை தொடர்பில் ஏப்ரல் 18 முதல் 22 ஆம் திகதிக்கிடையில் இலங்கை தூதுக்குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கிடையில் பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மஷஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் நிதி அபிவிருத்திகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளை வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கான ஒத்திசைவான உத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக IMF தெரிவித்துள்ளது.
கடன் வழங்கியவர்களுடனான ஒத்துழைக்கும் கலந்துரையாடலில் ஈடுபடும் இலங்கை அதிகாரிகளின் திட்டத்தை IMF வரவேற்றுள்ளது.
IMF மற்றும் உலக வங்கியுடனான கலந்துரையாடலுக்கு இடையில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவா மற்றும் ஏனைய சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்களை - நிதி mமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான பிரிதிநிதிகள் வாஷிங்டன் டிசியில் சந்தித்துள்ளனர்.
பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.